ராமநாதபுரம் வளர்ச்சி: மனது வைப்பாரா நிதியமைச்சர்?

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி நேற்று (நவம்பர் 25) சந்தித்து ராமநாதபுரம் தொகுதியின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.


ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி சந்தித்தார்.


இராமேஸ்வரத்தை சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவதற்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவும், ராமநாதபுரம் தொகுதியில் கொழுந்துரை, ஏர்வாடி, கன்னிராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் கிளைகளை நிறுவுவது தொடர்பாகவும், மண்டபம் பகுதியில் அமைந்துள்ள கேந்திர வித்யாலயா பள்ளி முதற்கொண்டு மத்திய அரசின் பள்ளிகளின் கட்டிடம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் கோரிக்கை வைத்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களின் நலனுக்காக, ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு மானியம் வழங்கப்படுவது போல மீன்பிடி உபகரணங்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும், பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கி ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்கு சாலை வசதிகளை மேம்படுத்தவேண்டும், ராமநாதபுரம், இராமேஸ்வரம் இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகில் மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.